பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தங்கத்தின் விலையைப் போல அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
மாதத்துக்கு இரண்டு முறை விலை நிர்ணயிக்கப்பட்டுவந்த நடைமுறையை மாற்றி தினசரி விலை மாற்றம் அமலுக்கு வந்தபிறகு, விலைக் குறைப்பை விட விலை உயர்வே அதிகமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக இருந்தன.
எனினும், பெட்ரோலியப் பொருட்கள் வாயிலான வரி வருவாயைக் கருத்தில்கொண்டு அவை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படவில்லை.
தற்போதைய நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.76 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.47 ஆகவும் இருக்கிறது. மற்ற நகரங்களிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 2) மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.